Monday, November 8, 2010

பண்பாட்டு எழுச்சியை நோக்கி...!

நாகரிகத்தினதும் அறிவியலினதும் நூற்றாண்டு என்று நாம் இந்நூற்றாண்டைக்குறிப்பிடுகிறோம். ஆனால் அக்கிரமங்களும் அநாச்சாரங்களும் மலிந்து போன அமைதியற்ற உலகத்தையே காண்கிறோம். கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக சடவாத, மதச்சார்பற்ற சிந்தனைகளின் அடியாகவே இவ்வுலகத்தின் ஒழுங்கு தீர்மானிக்கப்பட்டு வருகிறது. வஹியின் (இறைகட்டளையின்) வழிகாட்டல்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. விளைவு?

1. மனிதர்களின் பண்புகளும் நன் நடத்தைகளும் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு மோசமாகியுள்ளன.

2. குடும்ப அமைப்பு சீர்குலைந்து வருகிறது.

3. மதுவும் போதைப்பொருள் பாவனையும் களவும், கொலையும், பாலியல் துஷ்பிரயோகங்களும் சர்வசாதாரணமாகிவிட்டன.

4. ஆண் - பெண் தொடர்புகளில் பேணப்பட வேண்டிய எல்லா வரையறைகளும் நீக்கப்பட்டு விட்டன.

5. காதலும், சினிமாவும், நட்சத்திர நடன மேடைகளும் பொழுதுபோக்குகளாகி விட்டன.

6. ஆபாசத்திரைப்படங்களும், அரை நிர்வாண ஆடைக்கலாசாரமும் இளைய சமூகத்தை சீரழித்து வருகின்றன.

7. அநீதி, ஏமாற்று, மோசடி, பொய், பிறர் சொத்துக்களை அபகரிப்பது, அடுத்த சமூகங்களின் வளங்களை சுரண்டுவது, சுயநலம், பேராசை... போன்ற பண்புகளே மனித உள்ளங்களை ஆட்கொண்டுள்ளன. மொத்தத்தில் பண்பாட்டு விழுமியங்களை மறந்து பாதாளத்தை நோக்கி நாமெல்லோரும் சென்று கொண்டிருக்கிறோம். பல்வேறு சமூகங்கள் வாழும் ஒரு நாட்டில் வஹியின் அருளைப்பெற்ற சமூகம் என்ற வகையில் இவ்விடயம் பற்றி நாம் சிந்திக்க வேண்டியது கட்டாயக் கடமையாகும். இந்நாட்டில் வாளேந்திப் போராடி இருப்பை நிலைப்படுத்திக் கொண்டவர்களல்லர் நாம். எமது மூதாதையரின் பண்புகளும் நடத்தைகளும் இன்று வரை இந்நாட்டில் நாம் நிலைத்து நிற்க காரணமாக இருக்கிறது.

எனவே எமது பண்புகளால் சான்றுபகர்ந்து எம்மையும் எமது குடும்பத்தையும், நாம் வாழும் கிராமங்களையும், நகரங்களையும், முழு நாட்டையும் பண்பாட்டு வீழ்ச்சியிலிருந்து பாதுகாத்து இஸ்லாமிய கோட்பாடுகள், வாழ்க்கை முறை, பண்பாடு நாகரீகம் என்பவற்றின் பால் மனித சமூகத்தை வழிநடத்தக்கூடிய ஒரு முன்மாதிரி சமூகத்தை கட்டியெழுப்ப அணிதிரள்வோம்!!!